| ADDED : ஜூலை 25, 2011 09:54 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் ஒரு வாழை பழத்திற்காக சண்டையிட்டு மண்டையை உடைத்த போலீஸ்காரர் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர், ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வருகிறார். இவரும் வாலாந்தரவையை சேர்ந்த ராஜா மற்றும் பெயர் தெரியாத ஒருவரும் ராமநாதபுரம் பாரதிநகர் பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஒரு பெட்டி கடைக்கு சென்றனர். கடை அருகே நின்றவரிடம், 'வாழைபழம் என்ன விலை? என கேட்டபோது ''கடைக்காரர் வெளியே சென்றுள்ளார்'' என அங்கிருந்தவர் கூறியுள்ளார். ''விலை தெரியாமல் ஏன் கடை அருகே நிற்கிறாய்'' என கூறி, அவரை தாக்கியுள்ளனர். காயமடைந்தவர், தனது முதலாளியான முனியசாமியிடம் கூறினார். 'ஏன் தகராறு செய்கிறீர்கள்' என தட்டிக்கேட்ட முனியசாமியையும் தாக்கிவிட்டு மூவரும் தப்பி ஓடிவிட்டனர். தலையில் காயமடைந்த முனியசாமி, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரது புகார்படி, மூவரின் மீது வழக்குப்பதிவு செய்து கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர். தலைமறைவான போலீஸ்காரர் குமாரை சஸ்பெண்ட் செய்து அனில்குமார் கிரி எஸ்.பி., உத்தரவிட்டார்.