ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இருக்கு... ஆனா இல்ல... ஒரே ஒரு ஸ்கேன் டாக்டரால் சமாளிக்க முடியாத நிலை
ராமநாதபுரம்; ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., சி.டி., ஸ்கேன், அல்டரா சவுண்ட் ஸ்கேன் என அனைத்தும் இருந்தும்அதற்குரிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும், 700க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். சிறப்பு பிரிவுகளான எலும்பு முறிவு, தலைக்காயம் சிகிச்சை பிரிவு, நரம்பியல் சிகிச்சை பிரிவு, பல் மருத்துவம், காது மூக்கு தொண்டை பிரிவு, இருதய பிரிவு, குழந்தைகள் சிறப்பு பிரிவு, மகப்பேறு பிரிவு,அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு என பல்வேறு சிறப்பு பிரிவுகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். நோய் பாதிப்பு குறித்து ஸ்கேன் எடுக்க சிறப்பு பிரிவு டாக்டர்கள் பரிந்துரை செய்கின்றனர். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தினசரி 15 எம்.ஆர்.ஐ., ஸ்கேன், 200 சி.டி.ஸ்கேன், 100க்கும் மேற்பட்ட அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் எடுக்கப்படுகின்றன.இந்த மூன்று பிரிவுகளுக்கும் ஏழு டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 4 பேராவது பணியில் இருந்தால் சமாளிக்க முடியும். ஆனால் ஒரே ஒரு டாக்டர் மட்டுமே பணியில் இருந்து வருகிறார். இவர் ஒருவரே அனைவருக்கும் ஸ்கேன் எடுத்து விட்டு அதற்கான ரிப்போர்ட்டும் அவரே வழங்க வேண்டும்.இதனால் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுப்பவர்களுக்கு ஒரு வாரம் கழித்தே அதற்கான ரிப்போர்ட் வழங்கப்படுகிறது. சி.டி.ஸ்கேன் எடுப்பவர்களுக்கு இரண்டு நாட்கள் கழித்தே வழங்கப்படுகிறது. நோயாளிகளின் அவசரத்திற்குத்தான் ஸ்கேன் எடுக்க பரிந்துரை செய்யப்படுகிறது.அதன் ரிப்போர்ட்டை வைத்து தான் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சையை டாக்டர்கள் அளிக்க முடியும். ஆனால் ரிப்போர்ட் தாமதத்தால் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் உரிய நேரத்தில் பெற முடியாத நிலையில் சிரமப்படுகின்றனர்.நோயாளிகளும் உரிய சிகிச்சை கிடைக்காமல் தவிக்கின்றனர். ஏழை மக்கள் பணம் செலவு செய்ய முடியாத நிலையில் கடன் வாங்கி வெளியில் தனியாரிடம் ஸ்கேன் எடுக்கும் நிலை உள்ளது. தமிழக அரசும், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து போதுமான டாக்டர்கள், டெக்னீசியன்களை நியமிக்க வேண்டும்.