ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது
ராமநாதபுரம் : ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் முதல்வர் திறந்து வைத்த பின் பயன்பாட்டுக்கு வராதது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியான நிலையில் நேற்று காலை முதல் பஸ் ஸ்டாண்ட் செயல் படுகிறது. ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில் போதிய இடவசதி இல்லாததால் 2023 ஆக.,3 ல் 16,909 சதுர அடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கடந்த இரு ஆண்டுகளாக பணிகள் நடந்தன. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அக்.,3ல் புதிய பஸ் ஸ்டாண்டை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். முதல்வர் திறந்து வைத்தும் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக நேற்று காலை முதல் புதிய பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், மாவட்டத்திற்குள் செல்லும் பஸ்கள் என இரு நடைமேடைகளில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ்கள் வந்து செல்வதற்கு இரு நுழைவு வாயில்கள் அமைக்கப் பட்டுள்ளன. முன்னறிவிப்பு இல்லை புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பது குறித்த எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நேற்று காலை 8:00 மணி முதல் அனைத்து பஸ்களும் மாற்றி விடப்பட்டன. இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் பழைய பஸ் ஸ்டாண்டில் வந்து காத்திருந்தனர். அதன் பின் புதிய பஸ் ஸ்டாண்டிற்கு நடந்து சென்றனர். புதிய பஸ் ஸ்டாண்டை பராமரிப்பதற்கான பணியாளர்களை நியமிக்காததால் கழிப்பறைகள் பூட்டிக் கிடந்தன. அதே போல் நடைமேடையில் போதிய இருக்கைகள் இல்லாதால் மக்கள் பஸ்சுக்காக தரையில் காத்திருந்தனர். பேருந்து நிலையத்தை பராமரிக்க போதிய அளவில் ஆட்களை நியமிக்க வேண்டும் என பயணிகள் தெரிவித்தனர்.