பிரதமர் வருகை ஏப்.,4 - 6 வரை ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை
ராமேஸ்வரம்:ஏப்.,6ல் பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறக்க உள்ளதால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் ஏப்.,4 முதல் 6 வரை மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர்.ஏப்., 4 - 6 மீன் பிடிக்க தடை பிரதமர் வருகையையொட்டி ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அன்று மதியம் 12:10 மணிக்கு பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் பிரதமர் மோடி நின்றபடி புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்து ராமேஸ்வரம் டூ தாம்பரம் ரயில் போக்குவரத்தை துவக்கி வைக்கிறார்.இதற்காக இரு நாட்களாக மன்னார் வளைகுடா கடல், பாக்ஜலசந்தி கடலில் இந்திய கடற்படை, கடலோர காவல் படையினர் ரோந்து கப்பலில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் ஏப்.,4 முதல் 6 வரை மீன்பிடிக்க செல்லக்கூடாது எனவும், பாம்பன் பகுதியில் நிறுத்தியுள்ள விசைப்படகு, நாட்டுப்படகுகளை தங்கச்சிமடம், பாம்பன் குந்துகால் கடற்கரையில் நிறுத்த வேண்டும் எனவும் மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.