ராமேஸ்வரம்-திருவனந்தபுரம் ரயில் சேவை துவங்கியது
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு புதிய ரயில் போக்குவரத்து துவங்கியது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் அமைக்கப்பட்ட புதிய ரயில் பாலத்தை ஏப்.6ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து ஆக., 13ல் ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை மின் வழித்தடம் அமைக்கப்பட்டு தற்போது ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் மின் இன்ஜினில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் திருவனந்தபுரம் டூ மதுரை வரை இயக்கப்பட்ட அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ராமேஸ்வரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரயில் போக்குவரத்து துவங்கியது. இந்த ரயில் நேற்று மதியம் 12:45 மணிக்கு ராமேஸ்வரம் வந்தது. பா.ஜ., நிர்வாகிகள் மாரி, ராமு, கணேசன், முருகன் உள்ளிட்ட பலர் வரவேற்று ரயில்வே இன்ஜின் பைலட்டுக்கு சால்வை அணிவித்து பாராட்டினர். பின் மதியம் 1:30 மணிக்கு புறப்பட்ட ரயில் ராமநாதபுரம், மதுரை, பழநி, பொள்ளாச்சி, திருச்சூர் வழியாக இன்று அதிகாலை 4:55 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது.