உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் புதிய ரயில் பாலத்தை கடந்து சென்ற ரோந்து கப்பல் திறப்பு விழாவிற்கு ஒத்திகை

பாம்பன் புதிய ரயில் பாலத்தை கடந்து சென்ற ரோந்து கப்பல் திறப்பு விழாவிற்கு ஒத்திகை

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தை இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல் கடந்து சென்றது. இதன் மூலம் புதிய பாலம் திறப்பு விழாவிற்கு ஒத்திகை நடந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.பாம்பன் கடலில் 2020ல் புதிய ரயில் பாலம் கட்டுமானப்பணி துவங்கியது. இப்பாலம் நடுவில் துாக்கு பாலம் பொருத்துவதற்காக 2024 ஏப்., முதல் ரயில் பாலங்களை கடந்து செல்ல கப்பல்கள், படகுகளுக்கு ரயில்வே நிர்வாகம் தடை விதித்தது. 9 மாதங்களுக்கு பிறகு நேற்று புதிய மற்றும் பழைய ரயில் துாக்கு பாலத்தை ரயில்வே ஊழியர்கள் திறந்தனர்.அப்போது ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரோந்து கப்பல் ரயில் பாலங்களை கடந்து சென்றது. இதனை மதுரை ரயில்வே கோட்ட பொறியாளர் சந்தீப் பாஸ்கர், சீனியர் சிக்னல் பொறியாளர் ராம்பிரசாத், சீனியர் எலக்ட்ரிக்கல் பொறியாளர் மஞ்சுநாத் யாதவ் பார்வையிட்டனர்.பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா விரைவில் நடக்க உள்ளதால் பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்க உள்ளனர். விழாவில் புதிய, பழைய பாலத்தின் துாக்கு பாலங்கள் திறக்கப்பட உள்ளதால் நேற்று அதற்கான ஒத்திகை நடந்தது.பாலம் திறந்து மூடுவதை பிரதமர், ரயில்வே அமைச்சர் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மேடையில் நின்றபடியோ அல்லது இந்திய ரோந்து கப்பலில் சென்றபடியோ பார்வையிட உள்ளனர். அதற்காக நேற்று பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் தற்காலிக மேடை அமைக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலத்தை கடந்த ரயில்கள்

பாம்பன் கடலில் 1914ல் அமைத்த ரயில் பாலம் பலமிழந்து நடுவில் உள்ள துாக்கு பாலம் சேதமடைந்ததால் 2022 டிச., 23 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து ரத்தானது. இதற்கு முன்பே 2020ல் புதிய பாலம் கட்டும் பணி துவங்கியது.கடந்த ஆண்டு அக்.,ல் பணி முடிவடைந்து நவ.,ல் திறப்பு விழா நடத்த இருந்த நிலையில் பாலத்தில் சில குறைபாடுகள் இருப்பதாக ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சுட்டிக்காட்டினார். இதையடுத்து குறைகளை சரி செய்து 100 சதவீதம் பாலம் உறுதியாக உள்ளது என ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று அதிகாலை 5:30 மணிக்கு திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் 22 பெட்டிகளுடனும், மதியம் 1:15 மணிக்கு சேது எக்ஸ்பிரஸ் ரயிலின் 22 பெட்டிகளும் பாம்பன் புதிய பாலத்தை கடந்து ராமேஸ்வரம் வந்தன. திறப்பு விழா ஒத்திகையாக இரு ரயில்களும் இயக்கப்பட்டன. பராமரிப்பு பணி முடிந்ததும் மீண்டும் பாலத்தைக் கடந்து மண்டபம் ரயில்வே ஸ்டேஷனுக்கு இந்த ரயில் பெட்டிகள் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ