உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புதுக்கோட்டையில் பறிமுதல் செய்யப்பட்ட தொண்டி மீனவரின் விசைப்படகு விடுவிப்பு

புதுக்கோட்டையில் பறிமுதல் செய்யப்பட்ட தொண்டி மீனவரின் விசைப்படகு விடுவிப்பு

தொண்டி : புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் தடையை மீறி கரையோரத்தில் மீன்பிடித்த தொண்டியை சேர்ந்த விசைப்படகு பறிமுதல் செய்யபட்ட நிலையில் நேற்று விடுவிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே எம்.வி.பட்டினத்தை சேர்ந்தவர் சங்கரன் 60. இவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆக.,17ல் ஏழு மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கடலில் தடையை மீறி கரையோரத்தில் மீன் பிடித்தனர். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் புகாரின் பேரில் மணமேல்குடி மீன்வளத்துறை அலுவலர்கள் சென்று விசை படகை பறிமுதல் செய்தனர். ஏழு மீனவர்களையும் இனி வரும் காலங்களில் தடையை மீறி மீன்பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து தொண்டி சோலியக்குடி விசைப்படகு மீனவர்கள் கரையோரத்தில் மீன் பிடிக்கவில்லை என்று இரு நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். தொண்டி மீன்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தைக்கு பின் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தெற்கு புதுக்குடியில் பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டத்தில் மணமேல்குடி மீன்துறை அலுவலர்கள் மற்றும் தொண்டி விசைப்படகு மீனவர்கள் கலந்து கொண்டனர். இனி வரும் காலங்களில் ஐந்து நாட்டிகல் மைல் தொலைவிற்கு அப்பால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டும். கரையோரத்தில் மீன்பிடிக்க கூடாது என அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மீனவர்கள் சம்மதம் தெரிவித்ததால் விசைப்படகு விடுவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை