| ADDED : ஜூலை 16, 2025 11:26 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்திற்கு எதிரில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளை கலெக்டர் முடுக்கிவிட்ட நிலையில் அதிகாரிகளுடன் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் முகப்பு பகுதியில் வணிக வளாகங்கள் அமைக்கப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பேக்கரி, ஓட்டல்கள், ஜூஸ் கடைகள்நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவர்களது உதவியாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க மருத்துமனை நுழைவு வாயில் எதிரில் இருப்பதால் போட்டி போட்டு விற்பனை செய்வது மட்டுமல்லாமல் கடையின் முன் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தை முழுவதும் ஆக்கிரமித்து டீ பட்டறை, ஓட்டல் தோசைக்கல் போட்டு ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதன் காரணமாக இப்பகுதியில் வாகனங்கள் செல்வதில் பெரும் இடையூறு ஏற்பட்டது. இதனை கவனித்த கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங்காலோன் உடனடியாக வணிக வளாகத்தை வாடகைக்கு விட்டுள்ள அதிகாரிகளை உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தினார். இதனடிப்படையில் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை பிரிவு அதிகாரிகள், போலீசார் பாதுகாப்புடன் வணிக வளாகத்தின் முன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அப்புறப்படுத்தினர். கடை நடத்துபவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் நகர் முழுவதும் ஆக்கிரமிப்பு உள்ளது. அதனை அகற்றிவிட்டு, எங்கள் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்தனர். இதே போல் நகரின் அனைத்து பகுதியிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.