மீடியனில் வளரும் கருவேல மரங்களால் பயணிகளுக்கு ஆபத்து: நெடுஞ்சாலையில் எரியாத மின்விளக்குகள்
பரமக்குடி: ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி - மானாமதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மீடியன்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் வாகன ஒட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது. பஸ் ஸ்டாப்பில் மின்விளக்குகள் எரியாமல் இருளில் உள்ளது. சில இடங்களில் கழிப்பறைகள் பராமரிக்கப்படாமல் பூட்டியுள்ளது.மதுரையில் இருந்து பரமக்குடி வரை ராமேஸ்வரம் நோக்கி நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் வாகனபோக்குவரத்து உள்ளது. இந்த நான்கு வழிச்சாலையை சில மாதங்களாக பராமரிக்காமல் விட்டுள்ளனர். திருப்புவனம் மற்றும் பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் இருவழிச் சாலையில் சத்திரக்குடியில் டோல்கேட் கள் உள்ளன.ஆனால் ரோட்டோரத்தில் ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வாகன ஓட்டிகளை பதம் பார்ப்பதுடன், விபத்து அபாயம் உள்ளது. குறிப்பாக மீடியன்கள் பராமரிப்பு இல்லாமல் சீமக்கருவேல மரங்கள் வளர்கிறது. மேலும் வாகன ஓட்டிகள் ஓய்வெடுக்கும் இடம் மற்றும் பஸ் ஸ்டாப்பில் மின்விளக்குகள் எரியாமல் இருளில் உள்ளது.கழிப்பறைகளும் பராமரிக்கப்படாமல் உள்ளதுடன், சில இடங்களில் பூட்டி வைத்துள்ளதால் பயனற்று காணப்படுகிறது. ஆகவே வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் நலன் கருதி தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் அனைத்து வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.