கால்நடை மருந்தக சேதமடைந்த கட்டடத்தால் விபத்து அபாயம்
திருப்புல்லாணி : தரமற்ற பணியால் பத்தாண்டுகளுக்குள் சேதமடைந்த திருப்புல்லாணி கால்நடை மருந்தகத்தில் விபத்து அபாயம் உள்ளது.கடந்த 2014ல் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட திருப்புல்லாணி கால்நடை மருந்தகத்தில் சுவரின் பக்கவாட்டு பூச்சுகள் அனைத்தும் உதிர்ந்து விரிசலுடன் கூரை சிமென்ட் கட்டிகள் உதிர்ந்து வருகிறது. இந்நிலையில் சேதமடைந்த கட்டடத்தில் 2021ல் மராமத்து பணிகள் பெயரளவில் நடந்தது. தற்போது கட்டடத்தின் துாண்கள் அனைத்தும் விரிசல் ஏற்பட்டு தரமற்ற முறையில் உள்ளது. விவசாயிகள் கூறியதாவது:நாள்தோறும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் ஆடு, மாடு, கோழி, பூனை, நாய் உள்ளிட்ட கால்நடைகளை கொண்டு வந்து இங்கு சிகிச்சை அளித்து விட்டு செல்கின்றனர். கட்டடத்தின் தரமற்ற தன்மையால் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே சேதமடைந்த கட்டடத்தை உரிய முறையில் மராமத்து பணிகளை செய்ய வேண்டும் என்றனர்.