கமுதியில் கழிவு நீர் தேக்கத்தால் தொற்று நோய் பரவும் அபாயம்
கமுதி: கமுதி பேரூராட்சி முத்துமாரியம்மன் நகர், பல்லாக்கார தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு வீடுகளின் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கால்வாய் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மோட்டார் பழுதடைந்துள்ளதால் கழிவுநீரை ரோட்டோரத்தில் தேங்கி உள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பேரூராட்சி கவுன்சிலர் போஸ் செல்வா கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கால்வாய் தாழ்வாக உள்ளதால் கழிவுநீர் செல்ல வழியில்லை. இதனால் ஒரு சில ஆண்டுகளாக மோட்டார் வைத்து கழிவுநீரை வெளியேற்றி வருகின்றனர். தற்போது மோட்டார் பழுதை சரிசெய்ய பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.