உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிறு நீர்த்தேக்கங்களில் மீன் குஞ்சுகள் வளர்ப்போருக்கு.. ரூ.5000 மானியம் ; உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டம்

சிறு நீர்த்தேக்கங்களில் மீன் குஞ்சுகள் வளர்ப்போருக்கு.. ரூ.5000 மானியம் ; உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை மூலம் மீன் குஞ்சுகள் வாங்குதற்கு ரூ.5000 வரை மானியம் வழங்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நடப்பு ஆண்டு மானியக் கோரிக்கையில் இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2.36 லட்சம் உள்நாட்டு மீனவர்கள் உள்ளனர். உள்நாட்டு மீன் வளமானது உணவு உற்பத்திக்கும், உள்நாட்டு மீனவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. நீர்த்தேக்கங்கள், நீண்டகால மற்றும் குறுகிய கால பாசனக் குளங்கள், குட்டைகள் ஆகியவை மீன் வளர்ப்பில் முக்கிய பங்காற்றுகிறது. இந்நிலையில் ஊரகப் பகுதி மக்களுக்கு நவீன மீன்வளர்ப்பு முறைகளை அறிமுகம் செய்து வேலைவாய்ப்பை உருவாக்கவும், சுகாதாரமான மீன் விற்பனை வசதிகளை ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மாவட்ட அளவில் மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் மீன் வளர்க்க விரும்புவோருக்கு தொழில்நுட்ப பயிற்சி அளித்தல், மானியங்கள் வழங்குதல் என உள்நாட்டு மீன் உற்பத்தியை ஊக்குவிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணி மாவட்டத்தில் மீன்வள துணை இயக்குநர் தலைமையில் நடக்கிறது. இதுவரை முகமையின் கீழ் தமிழகம் முழுவதும் 7502 மீன் வளர்ப்பு பண்ணைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக் கோரிக்கையில் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு 50 லட்சம் மீன்வளர்ப்பு உள்ளீட்டு மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது பருமழை துவங்கி அனைத்து குளங்களிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 15 ஹெக்டேரில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து திட்டத்திற்கான மீன்வளத்துறை உதவி இயக்குநர் ராஜேந்திரன் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது பருமழை துவங்கி குளங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சிறிய நீர்த்தேக்கங்களில் மீன்வளர்க்க விரும்புவோருக்கு மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்ய மானியம் வழங்கப்படும். இதில் மீன்வளர்ப்பு தொழில் செய்வோருக்கு ஒரு ஹெக்டேருக்கு அதிகப்பட்சமாக 10,000 மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்ய ரூ.5000 மானியமாக வழங்கப்படும். சிறிய அளவில் மீன்வளர்ப்பு தொழில் செய்து வரும் மீனவ விவசாயிகள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் (வடக்கு) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 04567-230355 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி