ஏழைகளை குறிவைத்து நம்பர் லாட்டரி விற்பனை
பரமக்குடி: பரமக்குடியில் ஏழை மக்கள் மற்றும் தொழிலாளர்களை குறி வைத்து நம்பர் லாட்டரி விற்பனை தொடர்கிறது. தமிழகத்தில் 2003ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெ., முற்றிலுமாக லாட்டரி சீட்டை தடை செய்தார். இதனால் பல தொழிலாளர்கள் மீண்டனர்.லாட்டரி முற்றிலும் கண்ணில் தெரியாத வகையில் நம்பர் லாட்டரி விற்பனை துவங்கியது. இதன்படி ஒவ்வொரு நாளும் லாட்டரியின் கடைசி மூன்று எண்களை மட்டும் தெரிவித்து விற்பனையாளர்கள் பணத்தை பெற்றுக் கொள்கின்றனர். இதன்படி காலையில் இதற்கான ரிசல்ட் வெளி வரும் போது கூடுகின்றனர்.தொடர்ந்து கடைசி ஒரு எண் அல்லது இரண்டு எண் மற்றும் மூன்று எண்கள் என ரிசல்ட் வரும் சூழலில் அதற்கு ஏற்ப பணத்தை வழங்குகின்றனர். அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் தினமும் பல ஆயிரம் ரூபாயை ஏழை மக்கள் இழக்கும் சூழல் அதிகரித்துள்ளது. எனவே பரமக்குடியில் டீக்கடைகள், மக்கள் கூடும் இடங்களில் விற்பனை நடக்கிறது. ஆகவே தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.