சாயல்குடி: வீணாகும் காவிரி குடிநீரில் வாகனங்களை கழுவும் அவலம்
சாயல்குடி : திருச்சியில் இருந்து வரக்கூடிய காவிரி குடிநீர் முதுகுளத்துார் மற்றும் கடலாடி வழியாக மலட்டாறு மற்றும் சாயல் குடியை வந்தடைகிறது. குறிப்பிட்ட கிராமங்களில் பம்பிங் ஸ்டேஷன் மூலமாக தண்ணீர் செல்வதற்கு ஏற்ற வகையிலும் கட் டமைப்பு வசதிகள் உள்ளது. இந்நிலையில் கடலாடி அருகே பூப்பாண்டியபுரம் செல்லும் வழியில் உள்ள மலட்டாற்று பழைய பாலத்தில் வழிந்து ஓடும் காவிரி நீரை கொண்டு வாகனங்கள் கழுவும் இடமாக மாறி வருகிறது. சமீபத்தில் ஆயுத பூஜைக்கு வாகனங்களை கழுவுவதற்காக மலட்டாறு பழைய தரைப் பாலம் அருகே செல்லக்கூடிய பைப் லைனில் இருந்து தண்ணீர் வீணாகி வழிந்ததை பயன்படுத்தி வருகின்றனர். அவற்றிலிருந்து தண்ணீரை பெற்று ஜேசிபி., கார், கனரக வாகனங்கள், டூவீலர் உள்ளிட்டவைகளை வாட்டர் சர்வீஸ் செய்கின்றனர். தன்னார்வலர்கள் கூறியதாவது: கடலாடி அருகே மல்லட்டாறு பகுதியில் அடிக்கடி 24 மணி நேரமும் பைப் மூலம் தண்ணீர் கசிவு ஏற்படுவதால் ஊருணி போல தேங்குகிறது. இலையாணை கொட்டகை பகுதி யில் பெரிய பள்ளம் ஏற்பட்டு அவற்றில் தண்ணீர் வீணாக வெளியேறுவதால் அவற்றை புழக்கத்திற்கும், குளிப்பதற்கும், பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். இதே போன்று மலட்டாறு சர்வீஸ் மைய மாகவே மாறி வருகிறது. ஒரு சில கிராமங்களில் காவிரி நீர் வராமல் கானல் நீராக உள்ள நிலையில் முறையாக பராமரிப்பு இல்லாததால் வீணாகிறது. எனவே அவற்றை சரி செய்து பழுது நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.