உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கண்மாய்க்குள் வெட்ட வெளியில் சிவன் சிலை : கிராம மக்கள் கவலை 

கண்மாய்க்குள் வெட்ட வெளியில் சிவன் சிலை : கிராம மக்கள் கவலை 

திருவாடானை: திருவாடானை அருகே சுப்பிரமணியபுரம் கிராமம் சீவலாத்தி கண்மாய்க்குள் வெட்ட வெளியில் சிவன் சிலை மழை, வெயிலில் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் கிராம மக்கள் கவலையடைந்துள்ளனர். திருவாடானை அருகே சுப்பிரமணியபுரம் கிராமம் சீவலாத்தி கண்மாய்க்குள் பழமையான சிவன் கோயில் இருந்துள்ளது. காலப்போக்கில் அக் கோயில் சிதிலமடைந்து தற்போது 6 அடி உயரத்தில் அழகான சிவன் சிலை மட்டும் உள்ளது. கூரை கிடையாது. மழை, வெயிலில் உள்ள பழமையான இச்சிலை குறித்த விபரம் இப்பகுதி மக்களுக்கு தெரியவில்லை. இது குறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு கூறியதாவது: ஆறடி உயரம் உள்ள லிங்கத்தின் ஆவுடை வட்டவடிவில் இருக்கிறது. இதனால் இந்த லிங்கம் சோழர் கலைப்பாணியில் உள்ளது எனலாம். ராஜராஜசோழன் முதல் முதலாம் குலோத்துங்கச் சோழன் வரையிலான காலத்தில் பாண்டிய நாடு முழுவதும் சோழர் ஆட்சியின் கீழ் இருந்தது. அச்சமயம் திருவாடானை, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் சோழநாட்டு வணிகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இக்காலத்தில் இவ்வூரில் ஒரு சிவன் கோயில் கட்டப்பட்டிருக்கலாம். லிங்கம் பெரியதாக இருப்பதால் கோயிலும் பெரியதாக இருந்திருக்கும். இவ்வூரையும், சுற்றி உள்ள ஊர்களையும் நேரில் ஆய்வு செய்தால் தான் இதன் முழு வரலாற்றைக் கண்டறிய முடியும் என்றார். சுப்பிரமணியபுரம் கிராம மக்கள் கூறுகையில், இதுபோன்ற சிலைகள், கோயில்களை பராமரிக்க வேண்டிய ஹிந்து சமய அறநிலையத்துறையும், அதன் அதிகாரிகளும் கண்ணை மூடிக் கொண்டுள்ளனர். கோயில்களின் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஹிந்து அறநிலையத்துறை செயல்படுகிறது. இம் மாதிரி சிலைகளுக்கு கோயில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி