கீழக்கரை மின்வாரியத்தில் பணியாளர் பற்றாக்குறை
கீழக்கரை : கீழக்கரை நகராட்சியில் 21 ஆயிரத்து 701 மின் இணைப்புகள் உள்ள நிலையில் பணியாளர் பற்றாக்குறையால் சிரமம் ஏற்பட்டுள்ளது.கீழக்கரை மின்வாரிய அலுவலகத்தில் மின்னளவு கணக்கீட்டு பணிக்காக ஒரு நிரந்தர பணியாளர், இரண்டு ஒப்பந்த பணியாளர்கள் என மூவர் மட்டுமே பணிபுரிகின்றனர். தமிழ்நாடு மின்வாரிய விதிகளின் படி மின் கணக்கீடை 60 நாட்களுக்கு ஒருமுறை பதிவு செய்ய வேண்டும்.மின் கணக்கீட்டாளர் பற்றாக்குறையால் 60 நாட்கள் கடந்த நிலையில் பதிவு செய்வதால் மின் நுகர்வோர் வேறு வழியின்றி கூடுதல் மின் கட்டணம் செலுத்தும் நிலை தொடர்கிறது. மின்வாரிய அலுவலகத்தில் 2023 ஏப்.1 முதல் 2024 மார்ச் 31 வரை ரூ.15 கோடியே 90 லட்சத்திற்கும் அதிகமான தொகை ஆண்டு வருமானமாக கிடைக்கிறது.மக்கள் தொகை மற்றும் மின் இணைப்பு உள்ள வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மின்வாரியத்தில் பணியாளர்கள் பணியிடம் நிரப்பப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். கீழக்கரையைச் சேர்ந்த மக்கள் நல பாதுகாப்புக் கழகம் செயலாளர் முகைதீன் இப்ராஹிம் கூறியதாவது:கீழக்கரை நகர் பகுதி, பெரிய காடு, சின்ன மாயாகுளம், மருதன்தோப்பு, மோர்க்குளம், பாளையரேந்தல், தில்லையேந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை உள்ளடக்கிய மின் நிலையமாக கீழக்கரை துணை மின் நிலையம் செயல்படுகிறது.இங்கு மின் நுகர்வோர் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியாளர்கள் இல்லை. கூடுதல் நிரந்தர லைன்மேன்களும் இப்பகுதியில் இல்லை.எனவே கீழக்கரை நகர் பகுதியில் நிலவும் குறைகளை நிவர்த்தி செய்யக்கோரி முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பியுள்ளோம். எனவே நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.