ரோட்டோரத்தில் ஆடுகளை அறுப்பதால் சுகாதாரக்கேடு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு மருத்துவமனை அருகே ரோட்டோரத்தில் இறைச்சி கடையில் ரோட்டோரத்தில் ஆடுகளை அறுப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே சந்தை கடை வளாகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஆடு அடிக்கும் தொட்டி சேதமடைந்துள்ளதால் பேரூராட்சி சார்பில் இடித்து அகற்றப்பட்டது. தற்போது வரை புதிதாக ஆடு அடிக்கும் தொட்டி கட்டப்படவில்லை. இதனால் முதுகுளத்துார் பெரிய கண்மாய் அருகே தற்காலிகமாக செட் அமைத்து வியாபாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். அங்கு போதுமான வசதி இல்லாததால் தினந்தோறும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் முதுகுளத்துார் அரசு மருத்துவமனை அருகே 10க்கும் மேற்பட்ட ஆட்டிறைச்சி கடை செயல்படுகிறது. இங்கு ஒருசில நேரங்களில் ரோட்டோரத்தில் ஆடுகளை அறுத்து அதன் கழிவுகளை கழிவுநீர் கால்வாயில் கொட்டி விடுகின்றனர். இதனால் ரோட்டில் நடந்து செல்பவர்கள், வணிகர்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அருகில் அரசு மருத்துவமனை செயல்படுவதால் நோயாளிகளும் முகம் சுளிக்கின்றனர். எனவே இனிவரும் நாட்களில் ரோட்டோரத்தில் ஆடுகளை அறுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், தற்காலிக ஆடு அடிக்கும் தொட்டியை மட்டும் பயன் படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர்.