ஆம்புலன்ஸ்சில் வந்து தேர்வு எழுதிய மாணவர்
பெரியபட்டினம்; ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை பள்ளியில் மாணவர் ஒருவர் ஆம்புலன்ஸ்சில் வந்து பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினார்.பெரியபட்டினம் அருகே முத்துப்பேட்டையில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மோர்ப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த சமய ரித்திக் 17, பிளஸ் 2 படிக்கிறார். இவருக்கு காலில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதால் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் நேற்று பிளஸ் 2 வேதியியல் தேர்வு நடந்தது. நன்றாக படிக்கும் மாணவரான சமய ரித்திக் நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இதனால் வேதியியல் தேர்வை விட மனமின்றி ஆம்புலன்ஸ்சில் தாய் தந்தை மற்றும் உறவினர்களின் உதவியுடன் முத்துப்பேட்டை பள்ளிக்கு வந்தார். அங்கு வீல் சேரில் தேர்வு மையத்திற்குள் சென்று தேர்வு எழுதிவிட்டு மீண்டும் ஆம்புலன்ஸ்சில் மருத்துவமனைக்கு சென்றார்.