காட்டுநாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் தவிப்பு: ஜாதிச்சான்று இன்றி உயர்கல்வியில் சேர முடியல
மத்திய, மாநில அரசுகள்பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டின் மூலமாக பல்வேறு சலுகைகளை வழங்குகின்றனர். அதற்குஉரிய ஜாதிச் சான்றிதழ்பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது. பழங்குடியினருக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தில் உள்ள கோட்டாட்சியர்கள், அவர்களது பணி பாதுகாப்பு கருதி பல கேள்விகளை எழுப்பி விண்ணப்பங்களை நிராகரிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக காட்டுநாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பழங்குடியினர் ஜாதிச்சான்று(எஸ்.டி.,) கிடைக்காமல் பள்ளிக் கல்வியை கடந்து உயர்கல்வியில் சேர முடியாமல் தவிக்கின்றனர்.இதுகுறித்து காட்டுநாயக்கர் சமுதாய தலைவர்நடராஜன், தேவிப்பட்டினம் ஊராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் கணேசமூர்த்தி முன்னிலையில் பெற்றோர் மாணவர்களுடன் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர்.அவர் விசாரித்து ஜாதிச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். முன்னாள் வார்டு உறுப்பினர் கணேசமூர்த்தி கூறியதாவது:தேவிபட்டினத்தில் மட்டும் காட்டுநாயக்கர்சமுதாயத்தை சேர்ந்த 150குடும்பங்கள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. குழந்தைகள் பள்ளியில் படிக்கும் போது ஜாதிச்சான்றிதழ் தேவைப்படுகிறது. ஆனால் குருவிக்காரர் அல்லது காட்டுநாயக்கர்என ஜாதிச்சான்றிதழ் கேட்டு பல முறை விண்ணப்பித்துள்ளோம்.இதுவரை வழங்காமல்அதிகாரிகள் அலைய விடுகின்றனர். இதனால் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் அதன் பிறகு உயர்கல்வி படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்களாவது உயர்கல்வி படிக்கும் வகையில் உடன் ஜாதிச்சான்றிழ் வழங்க வேண்டும் என்றார்.