உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தமிழக - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு மத்திய அமைச்சர் தகவல்

தமிழக - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு மத்திய அமைச்சர் தகவல்

ராமேஸ்வரம்:''மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண தமிழக-- இலங்கை மீனவர்கள் பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது ''என மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் தெரிவித்தார்.ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று மீனவர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கடல் பாசி, கூண்டு வலையில் மீன் வளர்ப்பினால் ஏற்படும் பயன்கள், பிரச்னைகள் குறித்து மீனவர்கள் முறையிட்டனர்.இதற்கான மத்திய அரசின் நிதி பங்களிப்பு மற்றும் போதிய நடவடிக்கை குறித்து மத்தியமைச்சர் ஜார்ஜ் குரியன்விளக்கிப் பேசினார். இதில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு இயக்குநர்கள் கிரின்சன் ஜார்ஜ், செல்வராஜன், மண்டபம் ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி வினோத், மூத்த விஞ்ஞானி ஜான்சன் உட்பட பலர் பங்கேற்றனர்.பின் அமைச்சர் ஜார்ஜ் குரியன் நிருபர்களிடம் கூறியதாவது:பிரதமரின் மீனவர் வளர்ச்சி திட்டத்தில் தமிழகத்தில் 100 கிராமங்களை தேர்வு செய்துள்ளோம். முதல் கட்டமாக 6 கிராமத்தில் தலா ரூ.2 கோடியில் மீனவர்களுக்கு வீடுகள், வருவாயை பெருக்க மீன், கடல்பாசி வளர்ப்பு உள்ளிட்ட வேலைவாய்ப்புகள், வசதிகளை நிறைவேற்ற நிதி வழங்கப்பட்டுள்ளது.மீனவர்கள், மீன் வளங்களை தேடி மீன்பிடிக்கவும், இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், கரையில் உள்ள உறவினர்களுடன் தொடர்பு கொள்ளவும், எல்லை தாண்டி மீன் பிடிப்பதை தவிர்க்க சாட்டிலைட் மூலம் தகவல் கிடைக்க நாடு முழுவதும் ஒரு லட்சம் மீன்பிடி படகுகளில் டிரான்ஸ்பாண்டர் கருவி பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்வதை தவிர்த்து, இலங்கை கடற்படை தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.மேலும் மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய வெளியுறவு, மத்திய மீன்வளத்துறை செயலாளர்கள், இலங்கை உயரதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றனர். தமிழக- இலங்கை மீனவர்கள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி சமூகத் தீர்வு காண வாய்ப்பு உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ