தமிழக அரசின் மீனவர் ஏமாற்று அரசியல்
ராமநாதபுரம்,:தமிழக நாட்டுப்படகு மீனவர்களை விசைப்படகு மீனவர்கள் என இலங்கை அரசு தவறாக கைது செய்த வழக்கில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மீனவர்களை ஏமாற்றும் அரசியல் செய்கிறது என்று தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் கூறியிருப்பதாவது:ஆக.,8 ல் இலங்கை கடற்படையினரால் நான்கு நாட்டுப்படகுகளில் இருந்த 35 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நாட்டுப்படகில் சென்ற நிலையில் இலங்கை நீதிமன்றத்தில் விசைப்படகுகள் என தவறாக தெரிவிக்கப்பட்டதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.நாட்டுப்படகு மீனவர்களை தவறுதலாக விசைப்படகு மீனவர்கள் என தெரிவிக்கப்பட்டதால் 87 நாட்களாக சிறையில் உள்ளனர். இது குறித்து மத்திய, மாநில அரசுகள் எந்த நடடிக்கையும் எடுக்கவில்லை. சென்னையில் உள்ள இலங்கை துாதரக துணை கமிஷனரிடம் புகார் அளித்தோம். அதற்கு, இதுபோன்ற எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை என்றனர். சிறையில் வாடும் 35 நாட்டுப்படகு மீனவர்களின் நிலை குறித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மீனவர்களை ஏமாற்றும் செயல். தமிழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லும் நிலையில் இலங்கை துாதரக அலுவலகத்தில் இது போன்ற தகவல் வரவில்லை என கூறியுள்ளனர்.இதன் மூலம் தமிழக அரசு மீனவர்களை ஏமாற்றி அரசியல் செய்வது தெரிகிறது. இது கண்டிக்கதக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது.