உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவாடானை அருகே 1933ல் அமைக்கப்பட்ட சுமைதாங்கி கல்

திருவாடானை அருகே 1933ல் அமைக்கப்பட்ட சுமைதாங்கி கல்

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பண்டைய கால மக்களால் 1933 ல் அமைக்கப்பட்ட சுமைதாங்கி கல் பார்ப்போரை வியக்க வைக்கிறது. பண்டைய காலத்தில் மக்கள் நடை பயணத்தில் தான் நீண்ட துாரம் செல்வார்கள். வசதியானவர்கள் மட்டுமே மாட்டு வண்டி வைத்திருந்தனர். நீண்ட தொலைவு வரை, சுமைகளுடன் மக்கள் நடந்தே செல்லும் போது தங்களுக்கு தேவையான பொருட்களை தலையில் சுமந்து செல்வதே வழக்கமாக இருந்தது. பல நுாறு கி.மீ., கோயில் திருவிழாக்களை காண குடும்பத்துடன் நடந்து சென்றனர். பாரங்களை வைக்க ஊர் எல்லை பகுதிகளில் சுமைதாங்கி கற்களை அக்காலத்தில் அமைத்தனர். அவை ஐந்து அடி உயரம், இரண்டு அடி அகலமுள்ள மூன்று கருங்கற்களை பயன்படுத்தி அமைக்கப்பட்டிருக்கும். போர்களில் இறந்த வீரர்கள், அரச பரம்பரையினர் நினைவாகவும், கர்ப்பிணிகளின் இறப்பு, வளர்ப்பு பசு இறப்பது மற்றும் முன்னோர் நினைவாகவும் சுமைதாங்கி வைக்கும் நடைமுறையும் இருந்தது. தற்போது போக்குவரத்து முறை நவீனமயமாகி சுமைதாங்கி கற்கள் தேவையின்றி போய்விட்டது. திருவாடானையிலிருந்து அஞ்சுகோட்டை செல்லும் ரோட்டில் கண்மாய் கரை ஓரத்தில் ஒரு சுமைதாங்கி கல் உள்ளது. அக் கல்லிலில் 1933ல் அமைக்கப்பட்டதாக எழுத்து உள்ளது. அஞ்சுகோட்டையை சேர்ந்த சிலர் கூறியதாவது: திருவாடானை தாலுகாவில் சில இடங்களில் சுமைதாங்கி கற்கள் உள்ளன. சிறுவர்களை தோளிலும், தலையிலும் சுமந்து, பல மைல் துாரம் பயணத்தின் போது தலையில் உள்ள பாரத்தை இறக்கி வைக்க சுமை தாங்கி கற்கள் தென்படுகிறதா என தேடியதாக எங்களின் மூதாதையர்கள் கூறி கேள்விப் பட்டுள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ