வண்ணாங்குண்டு ஊராட்சியில் வட்டார நாற்றங்கால் பண்ணை பல வகை மரக்கன்றுகள் கிடைக்கிறது
திருப்பல்லாணி; திருப்புல்லாணி அருகே வண்ணாங்குண்டு கிராமத்தில் ஊராட்சிகளுக்கு வழங்கக்கூடிய நாற்றங்கால் பண்ணையில் பலவகை மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ஒரு ஏக்கரில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு அவற்றை முறையாக தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கின்றனர். 2022 முதல் செயல்படும் நாற்றங்கால் பண்ணையில் கொடுக்காப்புளி, இலந்தை, நாவல் பழம், ஆல மரம், அரச மரம், அத்தி, இத்தி மரம், மஞ்சனத்தி, பூவரசு, ஆவி, புளி, புங்கை, வாகை மரம் உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் உள்ள மரங்கள் உரிய முறையில் இயற்கை உரங்களை பயன்படுத்தி வளர்த்து வருகின்றனர். மரக்கன்றுகளை வளர்த்தெடுக்கும் பணியில் பெண்கள் மட்டுமே செயலாற்றி வருகின்றனர். காலை, மாலை நேரங்களில் தண்ணீர் ஊற்றி பராமரிக்கின்றனர். மரக்கன்றுகளை திருப்புல்லாணி யூனியனுக்கு உட்பட்ட 33 ஊராட்சிகளுக்கும் அரசின் உரிய அனுமதி பெற்று வழங்கப்படுகிறது. கோடை வறட்சியிலும் பசுமையாக காணப்படும் நாற்றங்கால் பண்ணையை அவ்வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்கின்றனர். பெருவாரியான ஊராட்சிகளில் 2020ம் ஆண்டில் வளர்த்தெடுக்கப்பட்ட மியாவாக்கி எனப்படும் அடர் பசுங்குறுங்காடுகள் உரிய பராமரிப்பின்றியும், கோடை வெயிலின் தாக்கத்தால் கருகியும் வருகிறது. எனவே அவற்றை தனி அலுவலர்களின் ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.