பெருமாள், சிவன் கோயில்களில் மார்கழி உற்ஸவம் துவங்கியது திருப்பாவை, திருவெம்பாவை பாடி உற்சாகம்
பரமக்குடி: பரமக்குடியில் பெருமாள் மற்றும் சிவன் கோயில்களில் மார்கழி மகா உற்ஸவம் நேற்று துவங்கிய நிலையில் திருப்பாவை, திருவெம்பாவை பாடி பக்தர்கள் சுவாமியை தரிசித்து மகிழ்ந்தனர். பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை பக்தர்கள் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடினர். பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பரமக்குடி ஈஸ்வரன் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அதிகாலை மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடப்பட்டு தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அதிகாலை திருப்பாவை பாடப்பட்டு மகா தீபராதனை நடந்தது. தொடர்ந்து டிச., 19 அனுமார் ஜெயந்தி, பெருமாள் கோயில்களில் டிச., 20 பகல் பத்து உற்ஸவம் துவங்கி, வைகுண்ட ஏகாதசி விழா டிச., 30ல் நடக்கிறது. அன்று ராப்பத்து உற்ஸவம் துவங்கி 2026 ஜன., 8ம் தேதியுடன் நிறைவடையும். ஈஸ்வரன் கோயிலில் டிச., 27 அஷ்டமி சப்பர விழாவில் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் படி அருளிய லீலை நடக்கிறது. ஜன., 3 அதிகாலை ஆருத்ரா தரிசன விழா அபிஷேக ஆராதனைகளுடன் நடக்கிறது. இதையடுத்து அதிகாலை பனிக்கு மத்தியில் பாகவதர்கள் பஜனை பாடல்கள் பாடி வரும் நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். * திருவாடானைஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள், ஓரியூர் மட்டுவார் குழலி உடனுறை சேயுமானவர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கோயில்களில் மார்கழி வழிபாடு துவங்கியது. ஏராளமான பக்தர்கள் அதிகாலையில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடத்தி, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. * மார்கழி மாதத்தை முன்னிட்டு ராமநாதபுரம் சமஸ்தானம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் மற்றும் கோதண்டராமர் கோயில்களில் தினமும் அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு பஜனை வழிபாடு நடக்கிறது. மார்கழி மாதம் முதல் நாளான நேற்று ஸ்ரீ ராமநாத பஜனை சபா குழுவினர் கோதண்டராமர் கோயிலில் ஆண்டாள் பாடிய திருப்பாவை எழுச்சி, மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவை, சிவபுராணம் மாற்றும் இறைவன் பாடல்களை நான்கு ரதவீதிகளில்பாடினர். கோயில்களில் அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனையில் பக்தர்கள்சுவாமி தரிசனம் செய்தனர்.