உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொண்டியில் பழமையான துறைமுகம்

தொண்டியில் பழமையான துறைமுகம்

தொண்டி: தொண்டி கடற்கரையில் துறைமுகங்கள் இருந்ததற்கு ஆதாரமாக பட்டினம் என்ற பெயர்களுடன் முடியும் ஊர் பெயர்கள் உள்ளன.தொண்டி கடற்கரை பகுதியில் சுந்தரபாண்டியபட்டினம், தாமோதரபட்டினம், பாசிபட்டினம், முத்துராமலிங்க பட்டினம், பெரியபட்டினம், பெரியவலசை பட்டினம், முத்துவடுகநாத பட்டினம், புதுப்பட்டினம், கண்கொள்ளாபட்டினம் போன்ற பெயர்களுடன் ஊர்கள் உள்ளன.கிழக்குக் கடற்கரையின் இயற்கையான உப்பங்கழிகளால் பழமையான துறைமுகங்கள் தொண்டி பகுதியில் பெருமளவு இருந்துள்ளன. கடற்கரையோரம் அமைந்த நெய்தல் நிலத்து ஊர் பட்டினம்எனவும், பெரிய வணிக நகரங்கள் பட்டணம் எனவும் அழைக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் பட்டினம் என முடியும் ஊர்களுக்கு பெயர் வந்த விதம் குறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது:13-ம் நுாற்றாண்டில் சோழ, பாண்டிய நாட்டின் எல்லைப் பகுதியான எஸ்.பி.பட்டினம் சோழர், பாண்டியர் ஆட்சியின் கீழ் மாறி மாறி இருந்துள்ளது. சுத்தவல்லி என அழைக்கப்பட்ட இவ்வூர் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் சுத்தவல்லியான சுந்தரபாண்டியபுரம் என ஆனது. கிழவன் சேதுபதி செப்பேட்டில்சுந்தரபாண்டியன்பட்டணம் எனப்படுகிறது.திடீரெனத் தாக்கும் வலிமையான பாசிப்படை தங்கியிருந்ததாலும், பாசியாற்றின் கரையில் உள்ளதாலும் பாசிப்பட்டினம் எனப்படுகிறது. 1168-ல் பாண்டியர்களுக்கு ஆதரவாக இலங்கைப் படையும், சோழர் படையும் இவ்வூரில் போரிட்டன.இதில் முதலில் தோற்று பின் வெற்றியடைந்த சோழர் படை வெற்றிச் சின்னமாக இங்கு பாசியம்மன் கோயிலை கட்டியுள்ளது. பிற்காலப் பாண்டியர் ஆட்சியில்13-ம் நுாற்றாண்டில் புதிதாக உருவாக்கப்பட்டதால் புதுப்பட்டினம் எனப்படுகிறது. கண்ணைக் கவரும் அழகிய பட்டினம் என்ற பொருளில் கண்கொள்ளாபட்டினம் பெயர் பெற்றுள்ளது.ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி காலத்தில், தளவாயாக இருந்த தாமோதரன் பிள்ளை 1770-ல் தஞ்சை மன்னருடன் நடந்த போரில் வென்ற பின் தனிப்பட்ட எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டார். அவர் நினைவாக தாமோதரன்பட்டினம் உருவாகியுள்ளது. ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் பெயரால் முத்துராமலிங்கபட்டினம் உருவானது. சிவகங்கையின் 2வது மன்னர் முத்துவடுகநாத தேவர் ஆங்கிலேயருடன் நடந்த போரில் வீரமரணமடைந்தவர். சிவகங்கை சமஸ்தானத்தின் ஆட்சிப்பகுதியான இங்கு அவர் பெயரால் முத்துவடுகநாதபட்டினம் உருவாக்கப்பட்டுள்ளது.வலசை என்ற சொல்லுக்கு இடம் விட்டு இடம் குடிபெயர்தல்,சிற்றுார், கூட்டம் ஆகிய பொருளுண்டு. வணிகம் காரணமாக இடம் விட்டு இடம் பெயர்ந்த மக்கள் வாழ்ந்த துறைமுக ஊர் என்ற பொருளில் இவ்வூர் வலசைபட்டினம் என்றாகி அளவில் பெரிய ஊர் என்ற பொருளில் பெரியவலசைபட்டினம் எனப்படுகிறது. கல்வெட்டுகளில் தொண்டி, பெரியபட்டினம், காயல்பட்டினம் ஆகிய ஊர்கள் பவித்திரமாணிக்கப்பட்டினம் எனவும் அழைக்கப்பட்டன. துாய்மையான மாணிக்கக் கல் வணிகர்களால் இப்பெயர் வந்துள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை