பட்டாசு வெடித்து மாணவர் முகம் சிதைந்து பலி
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் பட்டாசு வெடித்ததில் 6ம் வகுப்பு மாணவர் முகம் சிதைந்து தந்தை கண் முன்பே உயிரிழந்தார்.ராமேஸ்வரம் அருகே மண்டபம் மைக்குண்டு சேதுநகரை சேர்ந்தவர் கனகராஜ் மகன் கரண்ராஜ் 12. இங்கு தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்தார். தீபாவளி கொண்டாட நேற்று முன்தினம் ராமேஸ்வரம் புதுரோட்டில் மாமா நம்புராஜன் வீட்டுக்கு கனகராஜ் குடும்பத்துடன் சென்றார்.தீபாவளியன்று இரவு தாத்தா வீட்டு முன் கரண்ராஜ் மேலே சென்று வெடிக்கும் உருளை வடிவில் உள்ள பட்டாசு திரிக்கு தீப்பற்ற வைத்தார். ஆனால் வெடிக்க தாமதம் ஆனதால் என்னவாயிற்று என்ற குழப்பத்தில் கரண்ராஜ் பட்டாசு குழாயை உற்றுப்பார்த்தார்.அப்போது திடீரென வெடித்து மேலே கிளம்பியதால் கரண்ராஜ் முகத்தில் பட்டாசு வெடித்ததில் முகம் சிதைந்து வலியால் துடிதுடித்தார். சிறிது நேரத்தில் அவர் தந்தை, உறவினர்கள் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். தனுஷ்கோடி போலீசார் விசாரிக்கின்றனர்.