திறந்த வெளி கழிப்பிடமாக மாறிய தொண்டி கைகுலான் ஊருணி
தொண்டி: தொண்டியில் குடிநீர் ஊருணியை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் நீராதாரம் மாசு படுகிறது. கடந்த ஆண்டு மற்றும் தற்போது பெய்த கோடை மழையாலும் ஊருணியில் நீர் தேங்கியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு குடிநீராக பயன்பட்டது. தற்போது அக்குளத்தில் இருந்து நீர் எடுத்து சென்று வீடுகளில் நடக்கும் சுப காரியங்களுக்கு பயன்படுத்துகின்றனர். இந்த ஊருணியை சுற்றிலும் சீமைக்கருவேல செடிகள் அடர்ந்துள்ளது. இதை பயன்படுத்தி சிலர் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: தொண்டியில் வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமான வாலிபர்கள் தங்கியிருந்து கட்டட தொழில் உள்ளிட்ட பல்வேறு வேலையில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலையில் அவர்கள் இந்த ஊருணிக்குள் சென்று திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது. மாசடைந்த நீரால் நோய் பரவும் அபாயம் அதிகரிக்கும். திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுக்கவும், மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.