இன்று இமானுவேல் சேகரன் நினைவு நாள்; ட்ரோன் மூலம் நேரடி கண்காணிப்பு
பரமக்குடி : பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்.பி., சந்தீஷ் தெரிவித்தார். அவர் கூறியதாவது: பரமக்குடியில் வெளி மாவட்டங்களில் இருந்து 6000 போலீசார் உட்பட 7000 பேருக்கும் மேல் 2 நாட்களாக பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 24 எஸ்.பி.,க்கள், 32 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 70 டி.எஸ்.பி., க்கள் பணியில் உள்ளனர். பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. டூவீலர் மற்றும் அனுமதி இல்லாத வாகனங்களில் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் 38 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 600 இடங்களில் போலீசார் பாதுகாப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். 500 சிசிடிவி.,க்கள் அமைக்கப்பட்டு பல்வேறு கிராமங்களில் பாதுகாப்பான முகவை என்ற அடிப்படையில் 3100 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அவையும் இந்த நேரத்தில் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படும். இந்த ஆண்டு 3 வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் டிரோன் மூலம் தொடர்ந்து நேரலை வாயிலாக கண்காணித்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போல் போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வரும் அனைத்து தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அ.தி.மு.க., உட்பட அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களுக்கும் அஞ்சலி செலுத்த கலெக்டர் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 52 கண்காணிப்பு வாகனங்கள் அனைத்து பகுதிகளிலும் சுற்றி வருகிறது. கூட்டம் அதிகமாக நுழையும் இடங்களில் 15 டாக் ஸ்குவாடுகள் கண்காணிப்பில் உள்ளனர் என்றார்.