தனுஷ்கோடியில் பயன்பாடின்றி முடங்கியது சுற்றுலா பாலம்
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் வனத்துறை அமைத்த சுற்றுலாப் பாலம் பயணிகளின்றி வெறிச்சோடியது.அக்., முதல் ஜன., வரை நிலவும் குளிர்கால சீசனில் தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில் முதல் தனுஷ்கோடி கம்பிபாடு வரை வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கடல் நீர், மழை நீர் 2 அடி முதல் 3 அடி உயரத்தில் தேங்கும். இதனுள் சிறிய ரக மீன்கள், நண்டுகள் வசிக்கும்.இதனை உண்டு குளிர் கால சீசனை அனுபவிக்க பிளமிங்கோ உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் இங்கு தங்கிச் செல்லும். இப்பறவைகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க வனத்துறையினர் ரூ.1 கோடியில் தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரத்தில் 100 மீ., சுற்றுலா மரப்பாலம் அமைத்தனர்.இந்த பாலம் திறந்து இரு மாதங்கள் ஆகியும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பாலத்திற்கு பாதை வசதி இல்லாததாலும், தற்போது தண்ணீர் இன்றி வறண்டு கிடப்பதாலும் பறவைகள் வரத்தும் இல்லை. சுற்றுலாப் பயணிகளிடம் வரவேற்பின்றி பாலம் வெறிச்சோடி கிடக்கிறது. ரூ.1 கோடி வீணாகும் நிலை உள்ளது.