டவுன் பஸ்சுக்கு பதில் ரூட் பஸ் அடையாளம் தெரியாமல் தவிப்பு
திருவாடானை டவுன் பஸ்களுக்கு பதிலாக ரூட் பஸ்கள் இயக்கப்படுவதால் இலவச பஸ்சா, கட்டண பஸ்சா என தெரியாமல் பெண் பயணிகள் தவிக்கின்றனர்.திருவாடானையை மையமாக வைத்து ஆனந்துார், காரங்காடு, மங்களக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், ஆண்டாவூரணி, தொண்டி என பல்வேறு கிராமங்களுக்கு 12 டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. பெண்களுக்கு கட்டணமில்லா பஸ்களாக இருப்பதால் பெண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். டவுன் பஸ்கள் குறிப்பிட்ட கலரில் வடிவமைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.பஸ் ஸ்டாண்டிற்குள் டவுன் பஸ்கள் நுழையும் போது அந்த கலரை பார்த்து பெண்கள் பயணித்து வந்தனர். நேற்று திருவாடானை பஸ்ஸ்டாண்டில் திருவாடானையில் இருந்து ஆனந்துார் சென்ற டவுன் பஸ் ரூட் பஸ்சாக இயக்கப்பட்டது.இதனால் அந்த வழித்தட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இது இலவச பஸ்சா அல்லது கட்டண பஸ்சா என்பது தெரியாமல் தவித்தனர். நேரக்காப்பாளர் ஆனந்துார் டவுன் பஸ் என்ற சத்தம் கேட்டு பஸ்களில் ஏறினர்.பயணிகள் கூறுகையில், எப்போதும் போல் வழித்தடங்களில் டவுன் பஸ்களையே இயக்க போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், திருவாடானை-ஆனந்துார் டவுன் பஸ் எப்.சி.,க்கு சென்று விட்டதால் அந்த பஸ்சுக்கு பதில் ரூட் பஸ் இயக்கப்பட்டது என்றனர்.