குண்டாசில் இருவர் கைது
ராமநாதபுரம் : கமுதி அருகே இளைஞர் நல்லுக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். விருதுநகர் மாவட்டம் அம்மன்பட்டியை சேர்ந்தவர் நல்லுக்குமார் 23. ஜூலை 14 ல் கமுதி அருகே மரக்குளம் கருமேனியம்மன் கோயில் பின்புறம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கமுதி கண்ணார்பட்டியை சேர்ந்த ரமேஷ் 27, மரக்குளத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் மணிவண்ணன் 30, அம்மன்பட்டியை சேர்ந்த இளங்கோவன் மகன் பிருத்திவிராஜ் 23, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் மணிவண்ணன், பிருத்திவிராஜ் ஆகியோர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில் தொடர் குற்றச்செயலில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் எஸ்.பி., சந்தீஷ் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.