பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் ரேக்களில் டூவீலர்கள்; ஆக்கிரமிப்பால் ஆபத்து
பரமக்குடி; பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் பஸ் நிறுத்தும் ரேக்குகளை டூவீலர்களை ஆக்கிரமித்து நிறுத்தி வைப்பதால் பயணிகள் நெரிசலுக்கு ஆளாகி விபத்து அபாயம் உள்ளது.பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து டவுன் மற்றும் வெளியூர் பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் பல்வேறு இடங்களில் இருந்து வரும் பஸ்கள், பஸ் ஸ்டாண்டில் நுழைந்து பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கிறது. இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் உள்பகுதியில் நகராட்சி சார்பில் டூவீலர் நிறுத்துமிடம் செயல்படுகிறது. இங்கு இட வசதி குறைவாக இருப்பதால் நெரிசலான இடத்தில் பல ஆயிரம் டூவீலர்களை நிறுத்தி வைக்கின்றனர். தொடர்ந்து ராமேஸ்வரம் மற்றும் டவுன் பஸ்கள் நிறுத்த, டூவீலர் ஸ்டாண்ட் அருகில் ரேக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தினமும், ஏராளமான கார்கள், டூவீலர்களை வரிசை கட்டி நிறுத்தி செல்கின்றனர். இதனால் ரேக்குகளில் பஸ்களை நிறுத்த முடியாமல் வழித்தடங்களில் நிறுத்தும்படி இருக்கிறது. அப்போது ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து பஸ்கள் வரும்பொழுது பயணிகள் ஏறி இறங்க முடியாமல் சிரமம் ஏற்படுகிறது.தொடர்ந்து குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் பஸ் நிறுத்தும் இடத்தை தேடி அலைவதால் பயணிகள் விபத்து நடக்க வாய்ப்புள்ளது. எனவே டூவீலர் ஸ்டாண்டை முறைப்படுத்துவதுடன், பஸ் நிறுத்தும் ரேக்குகளில் நிறுத்தும் டூவீலர்களை போக்குவரத்து போலீசார் கண்காணித்து 'லாக்' மற்றும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பயணிகள் வலியுறுத்தினர்.