உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வருக்கு வலியுறுத்தல்
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நடந்த அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நலச்சங்க கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தப்பட்டது.அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நலசங்க கூட்டம் தலைவர் ராஜாராம் பாண்டியன் தலைமையில் நடந்தது. செயலாளர் விஜயபாண்டியன் வரவேற்றார். பேரவை தலைவர் ராஜேந்திரன், துணைத்தலைவர் கோவிந்தராஜ் பங்கேற்றனர்.தலைவர் ராஜாராம்பாண்டியன் பேசுகையில், கோவை பேரவை நடவடிக்கைகள் பற்றி விளக்கம் அளித்தார். அரசாணை 142ஐ ரத்து செய்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என செப்.10ல் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் ஓய்வு பெற்றோர் குறையை நுாறு நாளில் தீர்ப்பேன் என்றார். நீதிமன்ற தீர்ப்பை மதித்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, 2022 முதல் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும் என்றார். பொருளாளர் முனியாண்டி நன்றி கூறினார்.