பரமக்குடியில் புதர், கருவேல மரம் சூழ்ந்த வைகை தடுப்பணைகள்: நீர் நிலைகளை பராமரிக்கலாமே
பரமக்குடி: பரமக்குடி அருகே நீர் ஆதாரங்களை பெருக்கும் நோக்கில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் புதர் மற்றும் கருவேல மரங்கள் வளர்ந்து ஆபத்தான சூழலில் உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனுார் வைகை ஆற்றின் குறுக்கே 50 ஆண்டுகளுக்கு முன்பு மதகணை கட்டப்பட்டது. இதன் மூலம் வலது, இடது பிரதான கால்வாய்கள் பிரிக்கப்பட்டு, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு விவசாயம் நடக்கிறது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் தெளிச்சாத்தநல்லுார், உரப்புளி, மந்திவலசை என தொடர்ந்து வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப் பட்டது. இதன் மூலம் அருகில் உள்ள கிளை கால்வாய்கள் மூலம் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது. ஆனால் தடுப்பணை பகுதிகளில் ஒட்டுமொத்தமாக நாணல் மற்றும் கருவேல மரங்கள் அடர்ந்து வருகின்றன. மேலும் ஆற்றில் மணல் கொள்ளையால் பள்ளம் ஆகிப்போன சூழலில் மேடாக உள்ள கால்வாய்களுக்கு தண்ணீர் செல்ல முடியாமல் இருக்கிறது. இத்துடன் ஷட்டர் பகுதிகளில் கருவேல மரங்கள் முளைத்து கட்டுமானத்திற்கு பாதிப்பை உண்டாக்குகிறது. ஆகவே ஒட்டுமொத்த விவசாய மற்றும் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட இது போன்ற தடுப்பணைகளை சீரமைக்க, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.