| ADDED : ஜூன் 04, 2024 05:42 AM
ராமநாதபுரம் மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ள வைகை ஆற்றை மையமாகக் கொண்டு பரமக்குடி நகர் உருவானது. பரமக்குடி, எமனேஸ்வரம் என வைகை ஆற்றின் இரு கரைகளிலும் 36 வார்டுகளுடன் நகராட்சியாக உள்ளது. இச்சூழலில் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதார அமைப்பு, கனிம வளத்துறை, வருவாய், போலீஸ், நகராட்சி அதிகாரிகள் என ஒவ்வொரு மட்டத்திலும் இயற்கையின் மீதான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதனால் நகராட்சி குப்பை முதல் கட்டடங்களை இடிப்பவர்கள் அதன் கழிவுகளையும் வைகை ஆற்றிலேயே கொட்டுகின்றனர். ஆற்றில் விடப்படும் கழிவு நீரால் ஏற்கனவே துர்நாற்றம் ஒருபுறம், ஊற்று நீர் மாசு மறுபுறம் என தன் நிலை இழந்துஉள்ளது வைகை ஆறு. இச்சூழலில் கடந்த சில மாதங்களாக வைகை ஆறு சர்வீஸ் ரோட்டில் இருபுறங்களிலும் கட்டடக் கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டுவது அதிகரித்துள்ளது.பரமக்குடி நகர் பகுதியில் வைகை ஆற்றில் இருக்கும் ஓரளவு மணற்பாங்கான பகுதியும் அளிக்கப்பட்டு வருகிறது.கழிவுநீர், குப்பை, கட்டடக் கழிவுகள், சீமைக்கருவேல மரங்கள், நாணல் என அடர்ந்து வைகை ஆறு அழியும் நிலையில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைகை ஆற்றை துாய்மைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் முழுவடிவம்பெறாமல் பணிகள் நிறுத்தப்பட்ட சூழலில் அனைத்து துறைகளும் இணைந்து வைகையை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.