வாலிநோக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு
வாலிநோக்கம்: வாலிநோக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள மாணவர்கள் நலனுக்காக அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து தினமலர் செய்தி எதிரொலியாக தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளது. வாலிநோக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி 2006ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 8 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். வாலிநோக்கம் ஊராட்சியில் பெரும்பாலும் மீனவர்கள் மற்றும் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. இப்பள்ளியை 2013ம் ஆண்டு முதல் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி கிராம மக்கள் தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகளுக்கும், தொகுதி அமைச்சருக்கும் மனு அளித்து வந்தனர். எந்த நடவடிக்கை இன்றி இருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் கடந்த ஆண்டு செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நடப்பு கல்வி ஆண்டு முதல் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளி வந்துள்ளது. வாலிநோக்கத்தைச் சேர்ந்த த.மு.மு.க., நிர்வாகி நுாருல் ஹூதா கூறியதாவது: வாலிநோக்கத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இன்றி சாயல்குடி, கடலாடி, சிக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்களில் சென்று படிக்கும் நிலை ஏற்பட்டது. சில மாணவிகள் படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். தற்பொழுது அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது, கிராம மக்களுக்கும் பெற்றோருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.