ராமநாதபுரம் நகர், புற நகர் பகுதிகளில் குடிநீர் விநியோகம்.. பாதிப்பு: ஜல்ஜீவன் திட்டப் பணிகளால் காவிரி குழாய்கள் உடைப்பு
ராமநாதபுரம்: ஜல்-ஜூவன், பாதாளச்சாக்கடை, காஸ் இணைப்பு ஆகிய பணிகளுக்காக குழாய்கள் பதிக்கும் போது காவிரி குடிநீர் குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாகிறது. இதனால் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ராமநாதபுரம் நகர், புறநகர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய 2011 ம் ஆண்டில் திருச்சி நங்கநல்லுார் பகுதியில் காவிரி ஆற்று படுகையிலிருந்து 200 கி.மீ., குழாய் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு காவிரி கூட்டுக் குடிநீர் கொண்டு வரப்படுகிறது.காவிரியிலிருந்து பெறப்படும் தண்ணீர் ராமநாதபுரம் நகராட்சி, அச்சுந்தன்வயல், சூரன்கோட்டை, சக்கரகோட்டை, பட்டணம்காத்தான் என அனைத்து கிராமங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம், புதிய காவிரி குடிநீர் வழங்கும் திட்டத்தில் நகர், புறநகர் பகுதிகளில் குழிதோண்டி குழாய் பதிக்கும் பணியால் காவிரி குழாய் சேதமடைந்து வீணாவது வாடிக்கையாகியுள்ளது. இதே போன்று பாதாள சாக்கடை பராமரிப்பு பணி, ராமேஸ்வரம் ரோட்டில் காஸ் குழாய் பதிக்கும் பணியின் போது காவிரி குடிநீர் குழாய் சேதமடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. வெயிலின் தாக்கம் காரணமாக குடிநீரின் தேவை அதிகரித்துள்ள நிலையில் 2 முதல் 3 நாட்களுக்கு ஒரு முறை பெயரளவில் காவிரி குடிநீர் வருவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். இதனால் லாரிகளில் குடிநீரை குடம் ரூ.13க்கு விலைக்கு வாங்கி மக்கள் சிரமப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண நகர், புறநகர் பகுதிகளில் புதிதாக குழாய் பதிக்கும் போது சேதமடையும் பழைய காவிரி குடிநீர் குழாய்களை உடனுக்குடன் சீரமைக்க கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி, ஊராட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிட வேண்டும். --