நாட்டுப்படகு மீனவர்களுக்கு டீசல் மானியம் கிடைக்குமா? பழைய இன்ஜின்களுக்கு பில் இல்லாததால் சிக்கல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களுக்கு புதிதாக படகு வாங்குபவர்களுக்கு மட்டும் தான் டீசல் மானியம் கிடைக்கிறது. நாட்டுப்படகு வாங்கி 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களுக்கும், வறுமையின் காரணமாக பழைய இன்ஜின் வாங்கி பயன்படுத்துவோருக்கும் டீசல் மானியம் பெற முடியாமல் தவிக்கின்றனர். தமிழகத்தின் நீண்ட கடற்பரப்பை கொண்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் மீன்பிடித் தொழிலை நம்பியுள்ளனர். அத்தகைய மீனவர்கள் பயன்படுத்தும் மீன்பிடி படகுகளின் இயக்க செலவை குறைப்பதற்காக விற்பனை வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசலை அரசு வழங்கி வருகிறது. விசைப்படகுகளுக்கு ஆண்டுக்கு 19,000 லிட்டர் டீசலும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு ஆண்டுக்கு 4400 லிட்டர் டீசலும் வழங்கப்படுகிறது. இதில் பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்களிடம் உரிய ஆவணம் இல்லாததால் தற்போது வரை டீசல் மானியம் பெற முடியாமல் உள்ளனர். மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல் மானியம் பெறுவதில் நாட்டுப்படகு மீனவர்களுக்கு சலுகை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெரும்பாலான மீனவர்கள் டீசல் மானியம் வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்தனர். அப்போது மீனவர்கள் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய மீனவர்களுக்கு தற்போது வரை டீசல் மானியம் வழங்கப்படவில்லை. புதிதாக படகு வாங்குபவர்களுக்கு மட்டும் தான் டீசல் மானியம் கிடைக்கிறது. நாட்டுபடகு வாங்கி 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களுக்கும், வறுமையின் காரணமாக பழைய இன்ஜின் வாங்கி பயன்படுத்துவோருக்கும் டீசல் மானியம் பெற முடியாமல் தவிக்கின்றனர். பல தலைமுறைகளாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்க அரசு முன்வர வேண்டும் என்றனர். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூறியதாவது: மீனவர்கள் டீசல் மானியம் பெறுவதற்கு தங்களின் படகுகளுக்கு உரிய ஆவணம் வைத்திருக்க வேண்டும். உரிய முறையில் பதிவு செய்யாத மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்கப்படாது. நாட்டுப்படகு மீனவர்கள் டீசல் மானியம் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும். இதற்கு முன்பு மீனவர்கள் டீசல் மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்க 4 மாதம் காலஅவகாசம் கொடுக்கப்பட்டது. அதில் பதிவுசெய்யாத மீனவர்களுக்கு கூடுதல் காலஅவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.