செயல்படாத கண்காணிப்பு கேமரா தீபாவளிக்கு முன் சரிசெய்யப்படுமா
திருவாடானை, : குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை. தீபாவளிக்குள் சரி செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. திருவாடானை பகுதியில் வாகன விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இதனால் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கேமரா பதிவு காட்சிகளை வைத்து போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர். தனியார் நிறுவனங்களை சேர்ந்த சிலர் கண்காணிப்பு கேமராக்களை சொந்த செலவில் போலீசாருக்கு வழங்கி முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டது.ஆனால் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட கேமராக்கள் செயல்படாமல் உள்ளது. திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் மதுரை- தொண்டி, திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை நான்கு ரோடு சந்திக்கும் இடமாக உள்ளது. இங்கு தொண்டியை சேர்ந்த சரவணா ஜூவல்லரி சார்பில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது.ஆனால் பல மாதங்கள் ஆகியும் மின் இணைப்பு வழங்காததால் கேமரா செயல்படாமல் உள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:சில நாட்களுக்கு முன்பு சின்னக்கீரமங்கலத்தில் ஏழாம் வகுப்பு மாணவன் காரில் கடத்தப்பட்டார். கண்காணிப்பு கேமரா செயல்பட்டிருந்தால் கடத்தல் சம்பவம் குறித்து தெரிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். இதே போல் இப்பகுதியில் வாகன விபத்துக்களும் அதிகமாக உள்ளது. தீபாவளி நெருங்குவதால் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட கேமராக்கள் செயல்பட போலீசார் நடவடிக்கை வேண்டும் என்றனர்.