உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா? பூர்வீக  பாசன விவசாயிகள் எதிர்பார்ப்பு

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா? பூர்வீக  பாசன விவசாயிகள் எதிர்பார்ப்பு

ராமநாதபுரம்: வைகை அணைக்கு போதுமான நீர் வரத்து இருப்பதால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டால் வறண்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் விவசாய பணிகளை துவங்க ஏதுவாக இருக்கும். எனவே பூர்வீக பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க வேண்டும். தற்போது முல்லை பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பெரியாறு அணைக்கு வினாடிக்கு 5516.11 கன அடி நீர் வரத்து உள்ளது. வினாடிக்கு 1867 கன அடி திறக்கப்படுகிறது. முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் 134.30 அடியாக உள்ளது. தொடர்ந்து அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை உள்ளதால் வைகை அணைக்கு அதிகளவு தண்ணீர் எடுக்க பொதுப்பணித்துறையினர் முன் வர வேண்டும். தற்போது வைகை அணையானது 66.27 அடியாக நீர் மட்டம் உயர்ந்துள்ளது. முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 2046 கன அடியாக உள்ளது. வினாடிக்கு 869 கன அடி குடி நீருக்காகவும், முல்லை பெரியாறு பாசனப்பகுதிகளுக்காகவும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது வைகை அணைக்கு போதுமான நீர் வரத்து இருப்பதால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டால் வறண்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் விவசாய பணிகளை துவங்க ஏதுவாக இருக்கும். ஏற்கனவே வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு குறைந்த அளவே வந்திருப்பதால் கண்மாய் 2.5 அடிக்கு மட்டுமே நீர் உள்ளது. பொதுப்பணித்துறையினர் ராமநாதபுரம் பெரிய கண்மாய் உட்பட பூர்வீக பாசனப்பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். -------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !