ஆருத்ரா விழா வி.ஐ.பி., பாஸ்களை முறைப்படுத்தி போலி சந்தனம் விற்பதை தடுப்பீர்களா ஆபீசர்ஸ் பக்தர்கள் வலியுறுத்தல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் மரகத நடராஜர் தரிசனத்திற்கு வி.ஐ.பி., பாஸ் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும். போலி சந்தனம் விற்பனையை தடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர். மங்களநாதர் சுவாமி கோயிலில் அபூர்வ மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு படி களைதல், புதிதாக சந்தனம் பூசும் ஆருத்ரா தரிசன விழாவை காண்பதற்கு வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து ஏராளமான வி.ஐ.பி., கள் மற்றும் பக்தர்கள் வருகின்றனர். இவர்களுக்கு ராமநாதபுரம் சமஸ்தானம் சார்பில் வி.ஐ.பி., பாஸ் வழங்குவது தொடர்பாக எவ்வித முன் அறிவிப்பும் செய்வது இல்லை. இதனைசிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஒன்றும் தெரியாத பக்தர்களிடம் ரூ.பல ஆயிரத்திற்கு வி.ஐ.பி., பாஸ் மற்றும், நடராஜர் மீது பூசியது என சிலர் போலி சந்தன பாக்கெட் விற்பனை செய்வதாகவும் கடந்த ஆண்டுகளில் புகார் வந்துள்ளது.இவ்வாண்டு புகார்களை தவிர்க்க வி.ஐ.பி., பாஸ் வழங்குவது தொடர்பாக ராமநாதபுரம் சமஸ்தானம், ஹிந்து சமய அறநிலையத்துறையினர்வெளிப்படை தன்மையை கடைப்பிடிக்க வேண்டும். போலி சந்தனம் விற்பனையை தடுக்க வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.