உத்தரகோசமங்கை சிவன் கோயிலில் இன்று யாகசாலை பூஜை துவக்கம்: ஏப். 4 கும்பாபிஷேக கோலாகலம்
உத்தரகோசமங்கை: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ஏப்., 4 ல் கும்பாபிேஷகம் நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று (மார்ச் 31) முதல் யாகசாலை பூஜை துவங்குகிறது.பார்வதி தேவிக்கு சிவபெருமான் வேதகாமங்களின் ரகசியத்தை உபதேசித்ததாலே இந்த ஊர் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றுள்ளது.இங்கு சிவபெருமான் தாழம்பூவிற்கு சாப விமோசனம் அளித்துள்ளார். இக்கோயிலில் மட்டுமே தாழம்பூ வைத்து சுவாமியை வழிபடலாம். இங்கு அபூர்வ பச்சை மரகத நடராஜர் தனி சன்னதி உள்ளது. இங்கு 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலந்தை மரம் கோயிலின் ஸ்தல விருட்சமாக உள்ளது.இத்தகைய சிறப்புமிக்க இக்கோயிலில் 2010ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.ராஜகோபுரம், விமான கோபுரம், சால கோபுரம், சுதை வேலை, பஞ்சவர்ணம், பிரம்ம தீர்த்தம், அக்னி தீர்த்தம், ஸ்துாபி ஸ்தாபனம் உள்ளிட்டவை பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டுள்ளன.மரகத நடராஜர் சன்னதி அருகே உள்ள கல்துாண் மண்டபத்தில் 101 குண்டங்களுடன் யாகசாலை பூஜைக்கான ஹோம வேள்வி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.இன்று (மார்ச் 31) கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கி ஏப்., 4 வரை ஆறுகால யாக பூஜை நடக்கிறது. அன்று காலை 9:20 முதல் 10:20 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.