உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உழவர் நல சேவை மையம் அமைக்க இளைஞர்களுக்கு.. அழைப்பு: வேளாண் வணிகத்தில் ரூ.6 லட்சம் மானியம் பெறலாம்

உழவர் நல சேவை மையம் அமைக்க இளைஞர்களுக்கு.. அழைப்பு: வேளாண் வணிகத்தில் ரூ.6 லட்சம் மானியம் பெறலாம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண் வணிகத்துறை சார்பில் முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கும் திட்டத்தில் ரூ. 6 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. வேளாண்மை துறையில் டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் 1000 முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ரூ.10 லட்சத்தில் இரண்டும், ரூ.20 லட்சத்தில் ஒன்று என மூன்று உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளது. மொத்த திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதம் மானியமாக அதாவது ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும். இந்த உழவர் நல சேவை மையங்களில் உழவர்களுக்கு தேவையான விதைகள், உரங்கள், தரமான பயிர் பாதுகாப்பு மருந்துகள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்ய வேண்டும். வேளாண் உற்பத்தியை பெருக்கவும் பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் மேலாண்மைக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும். அத்துடன் நவீன தொழில் நுட்பங்கள், வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டுதல் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும். உழவர் நல சேவை மையங்கள் அமைப்பதற்கான தகுதி வயது வரம்பு 20 முதல் 45 வயதிற்குள், கல்வித் தகுதியாக வேளாண்மை அல்லது தோட்டக்கலை அல்லது வேளாண் வணிகம் அல்லது வேளாண் பொறியியல் படிப்புகளில் பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்பு பெற்றிருத்தல் வேண்டும். மேலும் அரசு நிறுவனங்களில் பணியில் இருத்தல் கூடாது. வங்கி மூலம் கடன் பெற்று தொழில் புரிவோர் நிறுவனத்தின் உரிமையானது தனியுரிமையாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் அடிப்படை கணினித் திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே நிதி உதவி பெற தகுதியுடையவராவர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ், பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு சான்றிதழ், ஆதார், ரேஷன் கார்டு, சரக்கு மற்றும் சேவை வரி எண் (ஜி.எஸ்.டி.,), நிரந்தர கணக்கு அட்டை எண் (பான் கார்டு), வகுப்பு சான்றிதழ், பயனாளி வங்கி கணக்குப் புத்தகம், வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் மற்றும் விரிவான திட்ட அறிக்கை போன்ற ஆவணங்களுடன் அக்ரிஸ்நெட் இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தகுதியானவர்கள் விரிவான திட்ட அறிக்கையுடன் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தில் 9 சதவீதம் வட்டியில் கடன் பெற வாய்ப்பு உள்ளது. மேலும் கடன் தொகைக்கு வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தில் 3 சதவீதம் வட்டி மானியம் பெறலாம். உழவர் நல சேவை மையங்கள் அமைக்க விரும்பும் தகுதியானவர்கள் மேற்கண்ட ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு ராமநாதபுரம் வேளாண்மை (வணிகம்) துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் .--------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ