தண்டவாளத்தில் விரிசல் பயணியால் விபத்து தவிர்ப்பு
அரக்கோணம்:கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து, சென்னை சென்ட்ரல் செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று காலை 8:20 மணிக்கு அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் சென்றது. அங்கிருந்து சென்னை நோக்கி புறப்பட்டது. புளியமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் அருகே சென்றபோது, தண்டவாளத்தில் பலத்த சத்தம் கேட்டது.இதை கேட்ட பயணி ஒருவர், அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். இதனால், நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டது. உடனடியாக இன்ஜின் டிரைவர், சத்தம் கேட்ட பகுதிக்கு சென்று பார்த்தபோது, தண்டவாளத்தில் பெரியளவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. அரக்கோணம் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து ரயில்வே ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, தண்டவாளத்தை சீரமைத்த பின், ரயில் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.