ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த பனப்பாக்கத்தில், 1,213 ஏக்கரில் நெடும்புலி, துறையூர், பெருவளையம், அகவலம் உள்ளிட்ட கிராமங்களை இணைத்து, சிப்காட் வளாகம் அமைக்கப்பட்டது. இதில், 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டாடா மோட்டார்ஸ், லேண்ட் ரோவர்ஸ், ஜாக்குவார் உள்ளிட்ட கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனிக்கு, கடந்தாண்டு செப்டம்பரில் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். டாடா நிறுவனம் நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடும்புலி பஞ்., நிர்வாகத்திடம் கட்டட வரைபட அனுமதி கோரி, அதற்கான தொகையும் செலுத்தியிருந்தது. பஞ்., தலைவர் மாறன், இதுவரை இறுதி ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து வருவதாக, டாடா நிறுவனம், கலெக்டரிடம் புகார் அளித்தது.விசாரணையில், கட்டட வரைபட அனுமதிக்கான தொகையை டாடா நிறுவனம் செலுத்தியும், தன் கடமைகளை பஞ்., தலைவர் மாறன் செய்யாதது தெரிந்தது. அவரது செக் பவரை ரத்து செய்தும், நெடும்புலி பஞ்., நிதி நிர்வாகங்களை நெமிலி பி.டி.ஓ., கண்காணிக்கவும், ராணிப்பேட்டை கலெக்டர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.