ஊராட்சி தலைவரை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் மறியல்
அரக்கோணம்:அரக்கோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்பாக்கம் ஊராட்சி தலைவராக இருப்பவர் சுந்தரம், 40. துணை தலைவர் உட்பட 8 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். ஊராட்சிக்கு உட்பட்ட மேல்பாக்கம் மற்றும் கும்பினிப்பேட்டை பகுதிகளில் கடந்த ஓராண்டாக எந்த ஒரு வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெறவில்லை. மேலும் ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோர் வார்டு உறுப்பினர்களை மதிப்பதில்லை என கூறி, நேற்று மாலை 4:00 மணியளவில் அரக்கோணம் -- சோளிங்கர் நெடுஞ்சாலை கும்பினிப்பேட்டையில் மேல்பாக்கம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 6 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் அறிந்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர்களிடம் பேசி அங்கிருந்த ஊராட்சி அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.பின் அரக்கோணம் பி.டி.ஓ.,வுக்கு தகவல் தெரிவித்தனர். மேல்பாக்கம் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்த பி.டி.ஓ.,க்கள் ஜோசப் கென்னடி, பாஸ்கர் ஆகியோர் வார்டு உறுப்பினர்களிடம் பேச்சு நடத்தினர்.திட்ட இயக்குனரிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.