உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அ.தி.மு.க., சேலம் மாநகர செயலர் நீக்கம் இ.பி.எஸ்., நடவடிக்கையின் பின்னணி என்ன?

அ.தி.மு.க., சேலம் மாநகர செயலர் நீக்கம் இ.பி.எஸ்., நடவடிக்கையின் பின்னணி என்ன?

அ.தி.மு.க., சேலம் மாநகர செயலர் நீக்கம் இ.பி.எஸ்., நடவடிக்கையின் பின்னணி என்ன?சேலம் :அ.தி.மு.க.,வின், சேலம் மாநகர் மாவட்ட செயலராக இருந்த வெங்கடாஜலம், அப்பொறுப்பில் இருந்து, 9 ஆண்டுக்கு பின் நீக்கப்பட்டுள்ளார். அவர் மீது, இ.பி.எஸ்., நடவடிக்கை எடுத்ததன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் உள்ளதாக, அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.அ.தி.மு.க., பொது செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில், 'சேலம் மாநகர் மாவட்ட செயலர் பொறுப்பில் உள்ள வெங்கடாஜலம், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். மாநகர் மாவட்ட கட்சி பணிகளை மேற்கொள்ள, எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் செல்வராஜ், சூரமங்கலம் பகுதி - 2 செயலர் பாலு, பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என, கூறியுள்ளார். இதுகுறித்து, சேலம் அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில் உள்ள, 11 சட்டசபை தொகுதிகளில், 9ல், அ.தி.மு.க.,வினர், எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். இதனால், அ.தி.மு.க.,வின் கோட்டையாக சேலம் உள்ளது.ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட, சேலம் மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம், சரியாக தேர்தல் பணி செய்யாததால், வெற்றி வாய்ப்பை இழந்தார். லோக்சபா தேர்தலிலும், இ.பி.எஸ்.,சின் சொந்த மாவட்டமான சேலம் தொகுதியில், அ.தி.மு.க., வெற்றி வாய்ப்பை இழந்தது. இது, இ.பி.எஸ்.,க்கு கோபத்தை ஏற்படுத்தியது. லோக்சபா தொகுதி பொறுப்பாளராக இருந்த, கட்சி அமைப்பு செயலரான, தர்மபுரி மாவட்டம் மொரப்பூரை சேர்ந்த சிங்காரம், தேர்தலின்போது பணியாற்றாத நிர்வாகிகள் குறித்து, இ.பி.எஸ்.,க்கு அறிக்கை அளித்தார்.தொடர்ந்து கட்சி செயல்பாடு, நிர்வாகிகள் குறித்தும் தெரிவித்து வருகிறார். வரும் சட்டசபை தேர்தலுக்கு, கட்சியில் சீரமைப்பு பணி மேற்கொள்ளவும், மாவட்ட பொறுப்பாளராகவும், சிங்காரம் செயல்படுகிறார்.இந்நிலையில் தான் வெங்கடாஜலம், மாநகர் செயலர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக லோக்சபா தேர்தலின்போது கட்சி பணி, மாநகரில் சொல்லும்படி நடக்கவில்லை. 9 ஆண்டுக்கு மேலாக, மாநகர் செயலராக உள்ளதால், வெங்கடாஜலம் பணம் செலவு செய்யாமல், பொறுப்பை தக்கவைத்தால் போதும் என இருந்துகொண்டார். பிற நிர்வாகிகளுடன் தொடர்பில் இல்லை. லோக்சபா தேர்தலுக்கு, பூத் கமிட்டி அமைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த பெரும்பாலோரின் பெயர், உண்மையானது இல்லை. பூத் நம்பர் தெரியாதவர்கள் கூட இருந்தனர். 800 பூத் எனில், 400 பூத்துக்கு கூட, கடைசி வரை முழுமையாக ஆட்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் வட்ட செயலரிடம், 'வைட்டமின் பா' வழங்கப்பட்டது. அவர்களில் சிலர் மட்டும் தான் சரியாக, வாக்காளர்களுக்கு வழங்கினர். பலர் சுருட்டிக்கொண்டனர். களத்தில் கட்சியினர் பணி செய்யவில்லை.இதனால் லோக்சபா தேர்தலில் தோல்வி ஏற்பட்டது. மேலும் கட்சியினர் பலரும், இ.பி.எஸ்.,சிடம் வெங்கடாஜலம் குறித்து புகார் தெரிவித்தனர். அவை விசாரணையில் உண்மை என தெரிந்ததால், வெங்கடாஜலம் நீக்கப்பட்டுள்ளார். அவர், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், தேர்தல் நேரத்தில் பிரச்னையை தவிர்க்க, அச்சமூகத்தை சேர்ந்த பாலுவையும், பிற சமூக பிரதிநிதியாக செல்வராஜையும் மாநகர பொறுப்பாளராக நியமித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி