நிலப்பிரச்னையில் தாக்குதலில் ஈடுபட்ட கூலிப்படையை பிடிக்க சாலை மறியல்
இளம்பிள்ளை, இருதரப்பினர் இடையே ஏற்பட்ட நிலப்பிரச்னையில் கூலிப்படையை ஏவி தாக்குதலில் ஈடுபட்டதால், பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இளம்பிள்ளை, நல்லணம்பட்டியை சேர்ந்த தறித்தொழிலாளி செல்வராஜ், 50. அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், 51. கூலித்தொழிலாளி. இவர்கள் இடையே, நிலப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று மதியம், 3:00 மணிக்கு, ரமேஷ் கூலிப்படையை ஏவி செல்வராஜ் தரப்பினரை தாக்கியதில், செல்வராஜின் மகன் மகேந்திரன், 23, தறித்தொழிலாளிகளான மணிகண்டன், 42, ராஜ்குமார் 35, சித்தம்மாள், 65, ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை, உறவினர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து கூலிப்படையினரை உடனே கைது செய்யக்கோரி, மக்கள், சேலம் - இளம்பிள்ளை பிரதான சாலையில், நல்லணம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே மாலை, 4:00 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். மகுடஞ்சாவடி போலீசார் பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், மக்கள் மறியலை கைவிட்டனர். இச்சம்பவத்தால், 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.