டாரஸ் லாரி கவிழ்ந்து மணலில் சிக்கிய 4 பெண்கள் மீட்பு
'டாரஸ்' லாரி கவிழ்ந்து மணலில் சிக்கிய 4 பெண்கள் மீட்புகெங்கவல்லி:கெங்கவல்லியில் இருந்து தம்மம்பட்டிக்கு, நேற்று மதியம், 2:40 மணிக்கு, 'எம்.சாண்ட்' மணல் ஏற்றிக்கொண்டு 14 வீல் கொண்ட, டாரஸ் லாரி சென்றுகொண்டிருந்தது. டிரைவர் ஹானஸ்ட்ராஜ், 38, ஓட்டினார். கொண்டையம்பள்ளி பஸ் ஸ்டாப்பில் சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த லாரி, ஒருபுறமாக கவிழ்ந்தது. இதில் ஸ்டாப்பில் நின்றிருந்த, கொண்டையம்பள்ளி செல்வி, 44, தங்கம்மாள், 45, மலையாளப்பட்டி தங்கா, 46, கலா, 60, ஆகியோர், கவிழ்ந்த லாரியின் எம்.சாண்ட் மணலில் சிக்கினர். தகவல் அறிந்து, மதியம், 3:10க்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தம்மம்பட்டி போலீசார், மக்கள், 'பொக்லைன்' உதவியுடன், ஒரு மணி நேரத்துக்கு பின், 4 பெண்களையும் காயத்துடன் மீட்டனர். உடன், ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு, ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டனர். பின் டாரஸ் லாரியையும் மீட்டனர். இச்சம்பவத்தால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.