உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கட்டட கழிவு கொட்டி ஏரி ஆக்கிரமிப்பு

கட்டட கழிவு கொட்டி ஏரி ஆக்கிரமிப்பு

கட்டட கழிவு கொட்டி ஏரி ஆக்கிரமிப்புபனமரத்துப்பட்டி : சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில், மல்லுார் அருகே, 100 ஏக்கரில் அம்மாபாளையம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு, சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரியின் உபரி நீர் வரும். ஆனால், 15 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் ஏரியில், பிளாஸ்டிக், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வகை கழிவு கொட்டப்பட்டு வருகிறது. சில நாட்களாக, ஏரி அருகே பயன்பாடற்ற பழைய சாலையில், கட்டட கழிவை கொட்டி வந்தனர். தற்போது பழைய சாலையில் இருந்து ஏரிக்கு உள்ளே சென்று, கட்டட கழிவு, தார்ச்சாலை கழிவுகளை கொட்டுகின்றனர். மலைபோல் குவிக்கப்படும் கட்டட கழிவால், ஏரியின் பரப்பளவு குறைந்து வருகிறது. கொஞ்சம், கொஞ்சமாக ஏரி ஆக்கிரமிக்கப்பட்டு வரும் நிலையில், நீர் நிலை குறித்து உயர்நீதிமன்ற உத்தரவை கூட யாரும் கண்டுகொள்ளவில்லை.அம்மாபாளையம் ஊராட்சியின் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள், ஏரியை துார்வாரி சீரமைத்தனர். ஆனால் மறுபுறம் கட்டட கழிவு கொட்டி, ஏரியை மூடும் அவலம் நடந்து வருகிறது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், '100 ஏக்கரில் இருந்த ஏரியில், 3 இடங்களில் தார்ச்சாலை போட்டதால் ஏரி சுருங்கி விட்டது. தற்போது கட்டட கழிவு, தார்ச்சாலை கழிவு கொட்டுவதால், ஏரி மூடப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஏரியை மீட்க, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ